சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
6.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE
6.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.095   அப்பன் நீ, அம்மை நீ,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

[1]
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே.

[2]
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?.

[3]
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!.

[4]
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், | திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், | பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், | விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும், | அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!.

[5]
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், | தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், | உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், | அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் | பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!.

[6]
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; | நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; | மறை   நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; | பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
என் ஆனாய்! என் ஆனாய்! என்னின் அல்லால், | ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.

[7]
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!.

[8]
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?.

[9]
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.096   ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம்   கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்;
காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே.

[1]
முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்; முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா;
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்; செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்;
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர் முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்;
அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்   அடியேனை ஆள் உடைய அடிகளாரே.

[2]
முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆகக் கொண்டார்;
அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்; மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்;
துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே.

[3]
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்;
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்;
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்;
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே.

[4]
அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்; மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.

[5]
பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம் கொண்டார்; பளிங்கும் கொண்டார்;
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்; நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்;
வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார்; வளையும் கொண்டார்;
ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

[6]
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்;
கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல்   ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்;
மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை மேல் நெடுவீதி போதக் கொண்டார்;
துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம் கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே.

[7]
பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்;
குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்;
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்;
இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.

[8]
எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்; இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்;
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல் அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து,
உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்; உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.

[9]
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்;
உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;
கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்;
விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார்   வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

[10]
குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்; குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்;
சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்; தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்;
பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம்   கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list